இதுவரை சிம்மராசியில் இருந்த சனிபகவான் 26-9-2009, விரோதி ஆண்டு, புரட்டாசி மாதம் 10-ஆம் தேதி, சனிக்கிழமை பகல் 3-30 மணிக்கு உத்திரம் 2-ஆம் பாதம் கன்னி ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்.
இது வாக்கியப் பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்டது. திருக்கணிதப் பஞ்சாங்கப்படி ஆவணி 24-ல் (9-9-2009) சனிப் பெயர்ச்சி. என்றாலும், திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா வாக்கியப் பஞ்சாங்கப்படி 26-9-2009-ல்தான். சனீஸ்வரருக்குரிய அதிகாரப்பூர்வமான தலம் திருநள்ளாறு. ஊர் ஊருக்கு அய்யப்ப சுவாமிக்கு கோவில் கட்டினாலும் கேரளத்தின் சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலே அதிகாரப்பூர்வமான கோவில் என்பதுபோல, திருநள்ளாறு கோவிலே சனீஸ்வரருக்கு உரிய திருத்தலம். அதனால் நாமும் சனிப்பெயர்ச்சி நாளாக 26-9-2009-ஆம் தேதியை எடுத்துக் கொள்வோம்.பொதுக்குறிப்பு
நவகிரகங்களில் மிக முக்கியமான கிரகம் - சக்திபடைத்த கிரகம் சனிபகவான்தான். சர்வேஸ்வரனால் சனீஸ்வரர் என்று ஈஸ்வரப் பட்டம் பெற்றவர்.
ஈஸ்வரன் என்ற பட்டம் ஐவருக்கு உண்டு. எல்லாம் வல்ல எம்பெருமான் சிவன்- சர்வேஸ்வரன்! ஈஸ்வரன் என்றாலே அது சிவனைத்தான் குறிக்கும். கணநாதர்களில் விநாயகருக்கு- விக்னேஸ்வரன் என்ற பட்டம். அசுரர்களில் இலங்கையை ஆண்ட இராவணனுக்கு- இலங்கேஸ்வரன் அல்லது இராவணேஸ்வரன் என்று பட்டம். நவகிரகங்களில் சனிக்கு- சனீஸ்வரர் என்று பட்டம். மனிதர்களில் கோடிச் செல்வத்துக்கு அதிபதி ஆகிவிட்டால்- கோடீஸ்வரன் என்ற பட்டம்!
அந்தக் காலத்தில் கோடீஸ்வரனாக இருப்பது ரொம்பவும் அபூர்வம்! அதேபோல கோடீஸ்வரர் வீட்டில் குடை வைத்துக் கட்டி குடைவீடு என்பார்கள்! இந்தக் காலத்தில் கோடீஸ்வரர்கள் என்பது சர்வசாதாரணம். அதிலும் தொழிலதிபர்களைவிட அரசியல் தலைவர்களும் மந்திரிகளும் பிரமுகர்களும் ஆயிரம் கோடி ஐயாயிரம் கோடி என்று பலகோடி அதிபர்களாக இருக்கிறார்கள்.
மற்ற எல்லா கிரகங்களையும்விட சனி கிரகம் பலமான- சக்திபெற்ற கிரகம் மட்டுமல்ல; ஒரு ராசியில் அதிக காலம்- இரண்டரை வருடம் தங்கிப் பலன் செய்யும் கிரகம். அதனால் அவருக்கு மந்தன் என்றும் முடவன் என்றும் பல பெயர்கள் உண்டு.
ஒரு ராசியில் இரண்டரை வருடம் என்ற விகிதத்தில் 12 ராசிகளையும் ஒருமுறை சுற்றி வருவதற்கு 30 வருடங்கள் ஆகும். அந்த முப்பது ஆண்டுகளில் பொதுவாக மனித வாழ்க்கையிலும் சரி; வீட்டிலும் நாட்டிலும்- அரசியல், ஆன்மிகம், சமுதாயம், பொதுவாழ்வு, தொழில்துறை என எல்லாவற்றிலும் ஏதாவது ஒரு மாற்றம் ஏற்படுவது இயல்பு. அதனால்தான் முப்பது வருடத்துக்குமேல் சேர்ந்தாற்போல் யோகத்திலே திளைத்தவர்களும் இல்லை; கஷ்டத்திலேயே இளைத்தவர்களும் இல்லை என்பார்கள்.
அவரவர் ராசிக்கு (சந்திரன் நிற்கும் இடம் ராசி எனப்படும். அதற்கு) 12-ஆம் இடத்தில் சனி வரும்போது ஏழரைச்சனி ஆரம்பம். அது முதல்கட்டச் சனி. அங்கு இரண்டரை வருடம் இருக்கும் சனி விரயச்சனி எனப்படும்.
அடுத்து ஜென்மராசிக்கு மாறும் சனி (2-ஆம் கட்டம்) ஜென்மராசி யில் இரண்டரை வருடம் இருக்கும்; அது ஜென்மச்சனி எனப்படும்.
அதைவிட்டு விலகி ஜென்ம ராசிக்கு 2-ஆம் இடத்தில் சனி வரும்போது, (மூன்றாம் கட்டச் சனி) இரண்டரை வருடம்- பாதச்சனி, குடும்பச்சனி, வாக்குச்சனி எனப்படும்.
இப்படி மூன்று கட்டமாக வரும் சனியின் மொத்தக் காலம்தான் ஏழரைச்சனியின் காலம் எனப்படும்! ஜாதக ரீதியாக ஒருவருக்கு வரக்கூடிய சனிதசை என்பது வேறு; கோட்சார ரீதியாக வரும் ஏழரைச்சனி என்பது வேறு.
சனீஸ்வரரால் சங்கடப்படுகிறவர்களும் பாதிக்கப்படுபவர்களும் சோதிக்கப்படுகிறவர்களும் பக்தியோடு அவரைச் சரணடைந்து வழிபட்டால் சனியின் கருணைக்குப் பாத்திரமாகலாம். அவர் பிடியில் இருந்தும் விடுபடலாம்.
சனி காயத்ரி மந்திரம்
காகத்வஜாய வித்மஹே; கட்க ஹஸ்தாய தீமஹி;
தந்நோ மந்த ப்ரசோதயாத்.
சனி சுலோகம்
நீலாஞ்சன ஸமாபாஸம் ரவிபுத்ரம் யமாக்ரஜம்
ச்சாயா மார்த்தாண்டம் ஸம்பூதம்
தம் நமாமி சனைஸ்சரம்.
தமிழ்த் துதி
சங்கடம் தீர்க்கும் சனிபகவானே
மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்
சச்சரவின்றி சனீஸ்வர தேவே
இச்சகம் வாழ இன்னருள் தா! தா!
முனிவர்கள் தேவர்கள் ஏழுலக மூர்த்திகள் முதலானோர்கள்
மனிதர்கள் சகல வாழ்வும் உன் மகிமையது அல்லாதுண்டோ,
கனிவுள தெய்வம் நீயே கதிர்சேயே காகமேறும்
சனிபகவானே உனைத் துதிப்பேன் தமியேனுக்கு அருள் செய்வாயே!
நவகிரகங்களில் முதன்மையான ஆதி கிரகம் சூரியன். துவஷ்டாவின் மகள் சஞ்ஞிகை என்பவள் (உஷா என்றும் ஒரு பெயர்) சூரியனை விரும்பித் திருமணம் செய்துகொண்டாள். வைவஸ்வதமநு, யமன் (மகன்கள்), யமுனை (மகள்) என்ற மூன்று பிள்ளைகளைப் பெற்றாள். இருந்தும் சூரியனுடைய வெப்பத்தைத் தாங்க முடியாமல் தவித்தாள். அதனால் சூரியனுக்குத் தெரியாமல் தன்னுடைய நிழலையே தன் மாதிரி பெண்ணாக்கி சூரியனுடன் குடும்பம் நடத்தும்படி கூறிவிட்டுத் தன் தகப்பனார் வீட்டுக்குப் போய்விட்டாள். அவள் பெயர் சாயாதேவி. பிரத்யுஷா என்றும் இன்னொரு பெயர்!
சஞ்ஞிகையின் வேண்டுகோளின்படி தான் வேறு ஒருத்தி என்ற ரகசியத்தை வெளியிடாமல், சூரியனுடன் அவன் முதல் மனைவி போலவே வாழ்ந்தாள் சாயாதேவி. அவளும் மூன்று பிள்ளைகள் பெற்றாள். சாவர்ணீமனு என்ற ஆண்மகனும், அடுத்து சனிபகவானும், பிறகு பத்திரை என்ற பெண் மகளும் பிறந்தனர்.
சாயாதேவிக்குக் குழந்தைகள் பிறந்ததும் சஞ்ஞிகையின் குழந்தைகளை சக்களத்திப் பிள்ளைகளாகக் கருதி கொடுமைப்படுத்த ஆரம்பித்தாள். இதையறிந்த சூரியனின் மூத்த தாரத்து இளைய குமாரன் யமன் (தர்மராஜன்) சாயாதேவியை மிரட்டி அடிக்கப் போனான். சனி தன் தாய்க்குப் பரிந்துகொண்டு சஞ்ஞிகையை ஓடிப்போனவள் என்று உதாசீனமாகப் பேசவே, யமன் கோபங்கொண்டு தன்னுடைய தண்டத்தால் சனியின் முழங்காலில் அடித்தான். அதனால் சனிபகவானின் வலதுகால் ஊனமானது.
இந்நிலையில் சூரியனுக்குத் தன் மனைவியைப் பற்றிய உண்மை தெரியவந்தது. தன்னை விட்டுப் பிரிந்துபோய் தவம்செய்து கொண்டிருந்த மூத்த மனைவி சஞ்ஞிகையைச் சமாதானப்படுத்தி மீண்டும் அழைத்து வந்தான். அதனால் சனிக்கு விரக்தி ஏற்பட்டு காசிக்குச் சென்று சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு கிரகபதவி பெற்றான். ஈஸ்வரனால் சனீஸ்வரன் என்ற பட்டமும் பெற்றான்.
சனிக்கு மந்தன், பிணிமுகன், முதுமகன், முடவன், காரி என்று பல பெயர்கள் உண்டு. சனிக்கு நீலா என்பவள் மனைவி. அவளைத் தவிர மந்தா, சேஷ்டை என்ற இரு மனைவியரும் உண்டு என்று நூல்கள் கூறும். சனிக்கு குளிகன் என்ற மகனும் உண்டு என்று ஜோதிட நூல்கள் கூறும். ஒவ்வொரு நாளிலும் குளிகனுக்குரிய காலம் (ஒன்றரை மணி நேரம்) ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் நற்காரியங்கள் செய்தால் மேன்மேலும் விருத்தியுண்டாகும் என்றும்; தீய காரியங்கள் செய்யக்கூடாது என்றும் கூறப்படுகிறது.
சனிபகவான் ஒரு முகமும் நான்கு கைகளும் உடையவன்; மேலிரு கைகளில் அம்பும் வில்லும், கீழ்க் கைகளில் வாளும் வரதமும் கொண்டவன்; நீல மேனி உடையவன்; சடைமுடி தரித்தவன்; கருநிற ஆடை, கருஞ்சந்தனம், நீல மலர்மாலை, நீலமணி மாலை புனைந்தவன்; இடப்பாகத்தே நீலா என்ற தேவியைப் பெற்றுத் திகழ்பவன்.
சனிபகவான் வில் வடிவமான ஆசனத்தில், சூரியனுக்கு முன்பாகிய மேற்குத் திசையைத் தனக்குரிய இடமாகக் கொண்டு சிறிது குள்ள வடிவினனாக வீற்றிருப்பவன்; அலித்தன்மையும் தாமத குணமும் கொண்டவன்; உலோகம்- இரும்பையும், ரத்தினம்- நீலத்தையும், தானியம்- எள்ளையும், புஷ்பம்- கருநீல மலரையும், சமித்து- வன்னியையும், சுவை- கசப்பையும், பாஷை- அன்னிய பாஷையையும், வாகனம் - காகத்தையும் கழுகையும் தனக்கென்று உடையவன். ஆயுள் காரகன்! சனிக்கு அதி தேவதை - யமன்; பிரத்யதி தேவதை - பிரஜாபதி! யமன் சனிபகவானுக்கு வலமாகவும்; பிரஜாபதி சனிக்கு இடமாகவும் விளங்குவர்.
சனிக்குரிய தலமாகத் திருநள்ளாறு திகழ்கிறது. இத்திருத்தலம் காரைக்கால் அருகே இருக்கிறது. நள மகாராஜாவுக்கு விமோசனம் கொடுத்த தலம். நளச்சக்கரவர்த்திக்கு ஏழரைச்சனிக் காலத்தில் பல வகையிலும் கஷ்ட- நஷ்டங்களைத் தந்து முடிவில் சனி விலகிய இடம்.
ஒவ்வொரு புண்ணிய தலத்துக்கும் மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற பெருமைகள் உண்டு. திருநள்ளாறில் இந்த மூன்று பெருமைகளும் உண்டு.
இத்தலத்தின் மூர்த்தி தர்பாரண்யேஸ்வரர். கிழக்குப் பார்த்த சந்நிதி. சுயம்பு மூர்த்தி. தர்ப்பை வனத்தில் எழுந்தருளியதால் தர்ப்பையிலான வடுக்கள் திருமேனியில் உள்ளதாகக் கூறப்படும். அம்பாள் "பிராணேஸ்வரி' என்றும்; "போகமார்த்த பூண் முலையாள்' என்றும் பேர் வழங்கப்படுகிறது. முசுகுந்த சக்ரவர்த்தி தேவேந்திரனிடமிருந்து வாங்கிவந்த சப்த விடங்கப் பெருமான் என்னும் ஏழு லிங்கங்களில் இரண்டாவது நகவிடங்கத் தியாகர் இங்கு அருள்பாலிக்கிறார்.
இத்திருத்தலத்தில் அஷ்டதிக்குப் பாலகர்கள் எட்டு பேரும் எட்டு தீர்த்தங்களை ஏற்படுத்தியிருக்கிறார்கள். சந்நிதிக்கு எதிரே வாணி தீர்த்தமும், கோவிலின் வடதிக்கில் அன்ன தீர்த்தமும், அகத்தியர் தீர்த்தமும், வடமேற்கில் நளதீர்த்தமும், அதற்குப் பக்கத்தில் நள கூபமும் உள்ளன. பிரம்ம தீர்த்தம், சரசுவதி தீர்த்தம், அம்ச தீர்த்தம் என்று பதின்மூன்று தீர்த்தங்கள் உண்டு.
அம்மன் சந்நிதிக்குப் பின்புறம் கிழக்குப் பக்கத்தில் சனி பகவான் திருச்சந்நிதி இருக்கிறது. மற்ற எட்டு கிரகங்களும் இல்லாமல் சனிபகவான் மட்டுமே தனியாகக் காட்சி தருகிறார்.
கலி நீங்கிய நளமகாராஜன் நள தீர்த்தத்தை உருவாக்கி, வைகாசி மாதம் புனர்பூச நன்னாளில் திருவிழா நடத்திப் புகழ்பெற்றதாக திருஞானசம்பந்தர் தமது பதிகத்தில் பாடுகிறார். வைகாசி மாதம் உத்திரட்டாதியில் தொடங்கி 18 நாட்கள் பிரம்மோற்சவம் நடக்கும்.
சனிப்பெயர்ச்சிக் காலங்களில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்து நளதீர்த்தத்தில் நீராடி ஈரம்பட்ட உடைகளை அங்கேயே விட்டுவிட்டு கோவிலுக்குச் சென்று வழிபடுவது உத்தமம்
மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் கன்னி மீனம்
Courtesy:Nakkeeran






